புக்கர் பரிசு என்பது நாவல்கள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்புகள் உட்பட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புனைகதைக்களுக்கு வழங்கப்படும் சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றாகும். இது முதன்முதலில் 1969-ல் வழங்கப்பட்டது.
எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவம் மிக்க விருதாக ‘சர்வதேச புக்கர் பரிசு’ கருதப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும் இந்த புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டுக்கான புக்கர் பரிசு இலங்கையை சேர்ந்த எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு கிடைத்துள்ளது. லண்டனில் உள்ள ரவுண்ட்ஹவுசில் நடைபெற்ற இந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்பிக்கப்பட்ட நிலையில், ஷெஹான் எழுதிய “தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா” என்ற புனைகதை இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
“தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா” நாவல் இலங்கையில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும், அந்நாட்டை பற்றியும் கொண்ட புனைகதையாக எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த தேமன் கால்கட் என்பவர் “தி ப்ராமிஸ்” என்ற நாவலுக்காக இந்த விருதை பெற்றார். இந்தியாவை சேர்ந்தவர்களில் 2008-ம் ஆண்டு அரவிந்த் அடிகா, 2006-ம் ஆண்டு கிரண் தேசாய், 1997-ம் ஆண்டு அருந்ததி ராய் ஆகியோர் புக்கர் பரிசை வென்றுள்ளனர்.