ஒரிசா மாநிலம் கட்டாக் நகரில் வசித்து வருபவர் ஜெகநாத் பெஹரா(22). இவரது தாத்தா சில நாட்களுக்கு முன் இறந்து போனார். அவரது இறுதிச்சடங்கிற்காக இரண்டு பேரிடம் 1,500 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை 30 நாட்களுக்குள் தருவதாக அவர் கூறியிருந்தார். ஆனால், அவரால் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இந்த நிலையில், கடன் கொடுத்த 2 இளைஞர்கள், பெஹராவின் கைகளை 12 அடி நீள கயிற்றால் கட்டி, அதன் மறுமுனை இரு சக்கர வாகனத்துடன் இணைத்து, ஸ்டூவர்ட்பட்னா சதுக்கத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுதாஹத் சதுக்கம் வரை சுமார் 20 நிமிடங்களுக்கு அவர்கள் பின்னாலேயே ஓட விட்டனர்.
சுதாஹத் சதுக்கத்தில் சிலர் கயிற்றில் கட்டிச் சென்றவர்களைத் தடுத்து நிறுத்தி ஜெகநாத் பெஹாராவை மீட்டனர். இந்த நிலையில், பைக்கில் ஜெகநாத் பெஹராவை கட்டி இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து ஜெகநாத்தை கட்டி இழுத்துச் சென்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் பயன்படுத்திய பைக், கயிறு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இப்பிரச்சினை தொடர்பாக சிறை வைத்தல், கடத்தல் மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக கட்டாக் நகர காவல்துறை துணை ஆணையர் பினாக் மிஸ்ரா கூறியுள்ளார். 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒருவரை பைக்கில் இழுத்துச் செல்லும் போது அப்பகுதியில் பணியாற்றிய போக்குவரத்து காவலர்கள் ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.