
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் ஷாலிமார் கார்டன் பகுதியில் ஜிம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஜிம்மின் உரிமையாளரான அடில் (33), வாடிக்கையாளர்களுக்கு உடற்பயிற்சி முறைகளை கற்று தரும் ஜிம் பயிற்றுனராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனினும், ஜிம்முக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளார். அவரும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொள்வது வழக்கம். சமீபத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கி, அதற்கான அலுவலகம் ஒன்றையும் ஷாலிமார் கார்டன் பகுதியில் திறந்துள்ளார்.
அந்த அலுவலகத்தில், கடந்த ஞாயிற்று கிழமை இரவு 7 மணியளவில், தனது இருக்கைக்கு வந்த அவர், மேலே அணிந்த பனியனை கழற்றி போட்டு விட்டு, நாற்காலியில் அமர்ந்து உள்ளார். சிறிது நேரத்தில் சோர்வாக காணப்பட்ட அவருக்கு மற்றொரு நபர் வியர்வையை துடைத்து விட்டு இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, சற்று நேரம் நாற்காலியில் அமர்ந்திருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அப்படியே சரிந்து உள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த உடனிருந்தவர்கள் அவரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.