
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் 750 பக்தர்கள் அதிகாலையில் அங்கப் பிரதட்சணம் செய்ய தேவஸ்தானம் அனுமதிக்கிறது. இதன்படி, வரும் நவம்பரில் அங்கப் பிரதட்சணம் செய்ய பக்தர்களுக்கான இலவச டிக்கெட் நேற்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

மேலும், டிசம்பர் மாதத்தில் நடைபெற்வுள்ள கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கும் பக்தர்கள் நேற்று ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொண்டனர்.
டிசம்பர் மாதத்துக்கான சுப்ரபாத சேவை, அர்ச்சனை, தோமாலை சேவை போன்றவற்றுக்கான எலெக்ட்ரானிக் குலுக்கலுக்கு நாளை (22-ம் தேதி) காலை 10 மணி முதல், 24-ம் தேதி காலை10 மணி வரை பதிவு செய்யப்பட உள்ளது. குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களுக்கு 24-ம் தேதி காலை 11 மணிக்கு மேல் அவர்களின் செல்போன் எண் அல்லது மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பப்படும் என, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.