
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலகம் கிராமத்திற்கு அருகே வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து கிராம மக்கள் அங்கு சென்று பார்த்த போது குவியலாக குரங்குகள் கொல்லப்பட்டு இறந்து கிடந்துள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் குரங்குகளின் உடல்களை கைப்பற்றினர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் மூலம் அங்கேயே இறந்த குரங்குகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டது. குட்டிகள் உள்பட மொத்தம் 45 குரங்குகளின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குரங்கு மற்றும் அதன் குட்டிகள் உள்பட மொத்தம் 45 குரங்குகளின் உடல்கள் இறந்து கிடப்பதாகவும் ஆனால் சிலகம் கிராமத்தில் குரங்குகளே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வேறு இடத்தில் யாரோ விஷம் வைத்து குரங்குகளை கொலை செய்து விட்டு இங்கு வந்து வீசி சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து விலங்குகள் நல சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஸ்ரீகாகுளம் வனத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணன், தெரிவித்தார். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் கடந்த ஆண்டு பெங்களூருவில் ஹாசன் மாவட்டத்தில் 38 குரங்குகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அது போல் இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள் மேலும் 40 குரங்குகள் கொல்லப்பட்டன. இவற்றிற்கு வாழைப்பழத்தில் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.