உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல் தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் மேலும் பல புதிய அம்சங்கள் குறித்த அறிவிப்பை மெட்டா நேற்று வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் வீடியோ காலில் 32 பேர் வரை இணையும் புது அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் வாட்ஸ்அப் குழுவில் 512 உறுப்பினர்கள் வரை அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த புதிய அப்டேட்டில் 1024 உறுப்பினர்கள் வரை இணையலாம் என்று மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதை தவிர ‘கம்யூனிட்டிஸ்’ என்ற புதிய வசதியையும் மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ்அப்பில் குரூப் உரையாடல்களை ஒழுங்கமைக்க, பயனர்கள் பல குரூப்களை ‘கம்யூனிட்டிஸ்’ கீழ் இணைக்க முடியும். இவை அனைத்தும் ‘என்ட் டு என்ட் என்க்ரிப்ஷன்’ மூலம் பாதுகாக்கப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.
இந்தப் புதிய அப்டேட் உலகளவில் விரைவில் வெளியிடப்பட்டு, அடுத்த சில மாதங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.