குடும்பத் தகராறில் 60 வயதான கணவனை அடித்து கொன்றே 55 வயது மனைவி..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அவினாசிபட்டி கிராமத்தில் கோயக்காடு பகுதியில் வசித்து வருபவர் விவசாயி சக்திவேல் (60). இவரது மனைவி கலைச்செல்வி (55). இவர்களுடைய மகன் விஜயகிருஷ்ணராஜ் (31). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணை விஜயகிருஷ்ணராஜ் விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் வெப்படை பகுதியை சேர்ந்த வினிதா (28) என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சஞ்சு ஸ்ரீ (2) என்ற பெண் குழந்தை உள்ளது. விஜயகிருஷ்ணராஜ் ராசிபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சக்திவேலும், அவருடைய மனைவி கலைச்செல்வியும் கூத்தகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென கலைச்செல்வியின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அங்கு சக்திவேல் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி, எலச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அவரது மனைவி கலைச்செல்வியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் அருகில் கிடந்த இரும்பு ராடை எடுத்து அவரது தலையில் தாக்கியதில் அவர் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். இதையடுத்து கலைச்செல்வியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். கலைச்செல்வி அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், எங்கள் மருமகள் வினிதாவை வேலைக்கு அனுப்புவது தொடர்பாக, எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 2 நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்த எனது கணவர் மருமகளை வேலைக்கு அனுப்புவது தொடர்பாக என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் என்னை கழுத்தை பிடித்து தள்ள முயற்சித்தார். என்னை அவர் எதுவும் செய்து விடக்கூடாது என்பதற்காக அருகில் இருந்த இரும்பு ராடை எடுத்து அவரது கழுத்து பகுதியில் தாக்கினேன் இதில் சரிந்து விழுந்த அவர் உயிரிழந்து விட்டார். குடும்பத் தகராறில் கணவனை மனைவியே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.