வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அது வருகிற 19ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகளை நெருங்க உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் வருகிற 18ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும்.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது, வருகிற 19ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகளை நெருங்க உள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை கடலோரம் மற்றும் அதன் உள்பகுதிகளில் 19ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளிலும், நாளை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
newstm.in