வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியம், வேல்வார்கோட்டை ஊராட்சிக்குட்பட்டது ஊராளிபட்டி. இங்கு கிராமமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யும் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. அருகிலேயே அரசு தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் கழிவுநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால், இப்பகுதியில் மேலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் நிலவுவதாக கிராமமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கழிவுநீரில் உருவாகும் கொசுக்களால் பள்ளி, அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதுடன், கால்வாய் வசதியும் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.