கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோயிலில் ஏராளமான திருமணங்களும் நடைபெறும்.
அப்படி சம்பவத்தன்று கோயிலில் சில ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட ஜோடி ஒன்று, கோயில் வளாகத்தில் போட்டோ ஷூட் எடுத்துள்ளனர்.
அப்போது கோயிலில் இருக்கும் தாமோதர தாஸ் என்ற யானை சென்று கொண்டிருந்தது. யானையின் மேல் ஒரு பாகனும், அருகே ராதாகிருஷ்ணன் என்ற இன்னொரு பாகனும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது யானை பின்னால் வர, இந்த திருமண ஜோடியோ முன்னாள் செல்லும் வகையில் ஒரு போட்டோ எடுக்கப்பட்டது. போட்டோவின் பிளாஷ் லைட் யானையின் கண்ணில் பட, உடனே யானை மிரண்டது.
அருகே நின்று கொண்டிருந்த மற்றொரு பாகனான ராதாகிருஷ்ணனை யானை தூக்கியது. ஆனால் யானையின் தும்பிக்கையில் பாகனின் வேட்டி மட்டும் சிக்கியதால் அவர் கீழே விழுந்தார்.
எனவே நூலிழையில் அந்த பாகன் உயிர் தப்பினார். இதையடுத்து அடிபட்ட பாகனும், திருமண ஜோடியும் அங்கிருந்து தெறித்து ஓடி விட்டனர். மேலே அமர்ந்திருந்த பாகன் யானையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.
இந்த சம்பவத்தால் அந்த கோயிலில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.
newstm.in