ஒன்றிய அரசின் உத்தரவை தொடர்ந்து வங்கி கணக்குகள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.மேலும், மின் மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் இன்று (நவ. 28) முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை, மின்கட்டண அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு மையங்களிலும் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களது மின் பயனீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையை நேரடியாக கொண்டு சென்று, இணைத்துக் கொள்ளலாம். அரசு விடுமுறைகளை தவிர்த்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் செயல்படும்.
மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில், ஆதார் எண்ணை இணைப்பதற்கு சிறப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது.