ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்தவர் ரோஹினி. அப்பகுதியில் சிறு உணவகம் நடத்தி வருகிறார். தனது அவசர தேவைக்காக பள்ளிபாளையத்தை சேர்த்த பைனான்ஸ் நிறுவனத்தில் 10 ஆயிரம் ரூபாய் தினசரி கந்து வட்டி முறையில் கடன் பெற்றுள்ளார். இதற்காக வட்டித்தொகை 2500 ரூபாயை பிடித்துக்கொண்டு 7500 ரூபாய் வழங்கிய அவர்கள், தினமும் 100 ரூபாய் வீதம் 100 நாட்களுக்கு பணம் செலுத்த கூறி உள்ளனர். இதன்படி 25 நாட்கள் பணம் செலுத்திய நிலையில், உடல்நல குறைவால் கடந்த ஒருமாதமாக ரோஹிணி பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தினசரி கந்து தொகை வசூல் செய்யும் மூன்று இளைஞர்கள் ரோஹிணியையும், அவரது சகோதரர் மணிகண்டனையும் ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி பள்ளிபாளையம் அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள கடை ஒன்றின் உள்பகுதியில் காலை முதல் மாலை வரை வெளியே விடாமல் அமரவைத்து மிரட்டிய அவர்கள், மணிகண்டனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இருவரும் கடத்தப்பட்ட தகவல் அறிந்து அங்கு சென்ற தமிழ்புலிகள் அமைப்பினர் இருவரையும் மீட்டு ஈரோடு வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்தனர். கடத்தி சென்று மிரட்டல் விடுத்த கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.