40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவையின் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில், மிசோரம் மாநில ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் ஆண்ட்ரூ லால்ரெம்கிமா, நிருபர்களிடம் கூறியதாவது,
மிசோரமில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளோம். நாங்கள் நேர்மையான மற்றும் துணிச்சலான வேட்பாளர்களைத் தேடி வருகிறோம். ஆம் ஆத்மி கண்டிப்பாக மிசோரத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் குறைந்தது 25 தொகுதிகளிலாவது போட்டியிடும். டெல்லியில் உள்ள எங்களது கட்சித் தலைவர்கள் இந்த வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்.
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் எங்களது இந்த வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார். ஆம் ஆத்மி தொடங்கப்பட்டு வெறும் 10 ஆண்டுகளே ஆகிறது. குஜராத் தேர்தலில் 5 தொகுதிகளைக் கைப்பற்றியதன் மூலம் நாங்கள் தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளோம். குஜராத்தினை போலவே மிசோரத்திலும் ஆம் ஆத்மி கால் பதிக்கும் என்று அவர் தெரிவித்தார்.