
மாண்டஸ் புயல் கரையை கடந்த போது பலத்த காற்று வீசியது. இதில், சென்னை சைதாபேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மூன்றரை வயது சிறுமி, தாய், தந்தை படுகாயம் அடைந்தனர். இதில், தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல, சென்னை மடிப்பாக்கம், ராம்நகர் 7வது மெயின் ரோட்டில் குடிசை வீட்டில் வசித்து வருபவர்கள் லட்சுமி(45). இவரது அண்ணன் மகன் ராஜேந்திரன்(25). இருவரும் நேற்றிரவு மாண்டஸ் புயல் காரணமாக குடிசை வீட்டில் இருந்தால் ஆபத்து என எண்ணி அருகில் உள்ள ஒரு வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் உறங்கச் சென்றனர்.
அப்போது, ஒரு பாய் மட்டும் எடுத்துச் சென்றதால் மற்றொரு பாய் எடுக்க லட்சுமி தனது குடிசைக்கு வந்தபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து கீழே விழுந்தார். அவரை மீட்க வந்த ராஜேந்திரனும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரவு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது, பின்னர் மின்சாரம் வந்த போது மின் கம்பியை மிதித்ததால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பகுதியில், மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை முடித்துவிட்டு திரும்பும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.