தமிழக அமைச்சராக நாளை பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின்.. கோட்டையில் தடபுடல் ஏற்பாடு..!!

விஜய் நடிப்பில் வெளியான ‘குருவி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் உதயநிதி ஸ்டாலின். அதன்பின் பல படங்களை தயாரித்த நிலையில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சினிமாக்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திமுக இளைஞரணி செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

இளைஞரணி தலைவராக பதவியேற்றதில் இருந்தே கட்சிப் பணிகளில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். குறிப்பாக தான் செயலாளராக பதவி வகித்து வரும் இளைஞரணியில் ஆட்களை சேர்க்கும் பணியில் முழு மூச்சாக இறங்கி 30 லட்சத்துக்கும் அதிகமானோரை திமுகவில் இணைத்தார் உதயநிதி ஸ்டாலின்.

இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உதயநிதிக்கு போட்டியிட திமுக சார்பில் சீட் கிடைத்தது. அந்த வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற போதே, அவரது மகன் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளராக 2-வது முறையாக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதால் அவரது பிறந்தநாளில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் பல மணி நேரம் காத்திருந்து வாழ்த்து தெரிவித்து சென்றனர். டிசம்பர் மாதத்திற்குள் உதயநிதி அமைச்சராகி விடுவார் என்று பரபரப்பாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இதுபற்றி அவரிடமே நிருபர்கள் கேட்டதற்கு நான் அமைச்சராவதை முதல்வர்தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்ப்பதற்கான முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டிருக்கிறார் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து ஆளுநரின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வான உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்ப்பதற்கான முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் அங்கீகரித்துவிட்டார் என்றும், நாளை டிசம்பர் 14-ம் தேதியன்று காலை 9.30 மணியளவியில் ராஜ் பவனிலுள்ள தர்பார் அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இதனையொட்டி, உதயநிதி ஸ்டாலின் அறையை கோட்டை ஊழியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அமைச்சரவை மாற்றத்துக்கான அப்பாயிண்ட்மென்டையும் ஆளுநர் கொடுத்துவிட்டதால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் அமைச்சரவை மாற்றத்துக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்போது, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக இருக்கும் மெய்யநாதனின் பொறுப்பை, விரைவில் உதயநிதி ஸ்டாலின் ஏற்க இருப்பதால் அவருக்கு வேறொரு துறை ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி அமைச்சராக பொறுபேற்க இருப்பதால் திமுகவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர். தமிழக அமைச்சரவை மாற்றம் 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ராஜ்பவனில் நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.