மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. அப்போது 33 அமைச்சர்கள் இருந்தனர். அதன்பின் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் போக்குவரத்துத் துறையில் இருந்து ராஜ கண்ணப்பன் விடுவிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் அத்துறையில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அமைச்சரவையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, புதிதாக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ-க்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. இதேபோல் கூட்டுறவுத்துறை அமைச்சராக உள்ள பெரியசாமி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்படுகிறார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், கூட்டுறவுத்துறைக்கு மாற்றம் செய்யப்படுகிறார். வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்படுகிறார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை அல்லது நாளை பிற்பகல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்ற பேச்சுக்களும் தற்போது எழுந்துள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி வகித்த உள்ளாட்சித் துறை அவருக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக திமுகவினர் விருப்பம் தெரிவித்து வந்தனர். ஆனால், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வசம் இருக்கும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறையை வழங்க ஸ்டாலின் விரும்பியதாக கூறப்படுகிறது.