
மத்திய தொகுப்பில் போதிய உணவு தானியங்கள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் அதன் இதர திட்டங்கள், பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் கூடுதல் ஒதுக்கீடு ஆகியவற்றிற்கு டிசம்பர் 12ஆம் தேதி நிலவரப்படி, மத்திய தொகுப்பில் 182 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை இருப்பில் உள்ளது.
ஜனவரி 1, 2023 வாக்கில் சுமார் 159 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கைவசம் இருக்கும் என நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தற்போதையத் தேவை அளவான 138 லட்சம் மெட்ரிக் டன்னைவிட கூடுதலாகும் என அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமையின் விலை நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதோடு, இதர பொருட்களுடன் கோதுமையையும் வாரந்தோறும் கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது. விலை மேலும் அதிகரிப்பதை தடுப்பதற்கு இந்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமின்றி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு குவிண்டாலுக்கு ரூ. 2015 ஆக இருந்த கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்த ஆண்டு குவிண்டாலுக்கு ரூ. 2125 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஏப்ரல் 2023 முதல் அடுத்த பருவத்திற்கான கோதுமையின் கொள்முதல் தொடங்க இருப்பதோடு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கோதுமையின் விளைச்சல் அதிகரித்திருப்பதாக முதல் கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

அனைத்து நலத்திட்டங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மத்திய தொகுப்பில் போதிய உணவு தானியங்கள் கையில் இருப்பதையும் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருப்பதையும் மத்திய அரசு தொடர்ந்து உறுதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது என அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
newstm.in