
பெங்களூருவை சேர்ந்த பிரசாந்த் (25) என்ற இளைஞருக்கும், ஆந்திராவை சேர்ந்த சுனிதா என்ற பெண்ணுக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது.
சுனிதா பிரசாந்தை விட 3 வயது மூத்தவர். இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொள்ளாமல் லிவ் இன் முறையில் பெங்களூருவில் வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சுனிதா பிரசாந்தை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், பிரசாந்திற்கு திருமணத்தில் உடன்பாடு இல்லை.
தனது சகோதரிக்கு திருமணம் செய்து வைத்தப் பின்னர் திருமணம் செய்து கொள்வதாக பிரசாந்த் கூறியுள்ளார். இந்நிலையில், பிரசாந்தின் சகோதரிக்கு அண்மையில் திருணம் முடிந்தது.

உடனடியாக தன்னை மணம் முடிக்க வேண்டும் என சுனிதா பிரசாந்தை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் கடந்த 7ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சுனிதாவை கடுமையாக தாக்கிய பிரசாந்த், கழுத்தை காலால் நெறித்து கொலை செய்தார்.
பின்னர், சுனிதாவை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்துகொண்டது போல செட் அப் செய்து மருத்துவமனைக்கு தகவல் தந்துள்ளார். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்த நிலையில், மருத்துவமனை பிரேத பரிசோதனையில் பிரசாந்தின் நாடகம் அம்பலமானது.
மருத்துவர்கள் காவல்துறையினரை உஷார் செய்த நிலையில், அவர்கள் பிரசாந்தை கைது செய்து விசாரித்தனர். அப்போது தனது கொலை குற்றத்தை பிரசாந்த் ஒப்புக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து பெங்களூரு காவல்துறையினர் பிரசாந்தை சிறையில் அடைத்தனர்.
newstm.in