ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளால் பணம் இழப்பு, தற்கொலைகள் என பல்வேறு பாதிப்புகள் விளைகின்றன. எனவே இந்த விளையாட்டு தளங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், இந்த விளையாட்டுகள் தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என உறுதி அளித்தார்.
ஆன்லைன் விளையாட்டுகளின் தாக்கம், குறிப்பாக அவற்றுக்கு அடிமையாவது குறித்து ஒவ்வொரு மாநிலமும் கவலை தெரிவித்து உள்ளன என்றும் இந்த விளையாட்டுகளுக்கு மக்கள் அடிமையாகி வருகின்றனர் எனவும் கூறினார்.
எனவே அனைத்து துறையினருடனும் மிகவும் தீவிரமான ஆலோசனை செயல்முறையை மேற்கொண்டுள்ளதாகவும், அதன்படி ஒரு புதிய சட்டம் அல்லது ஒழுங்குமுறையை உள்ளடக்கிய சரியான கொள்கையை மிக விரைவில் கொண்டு வர முடியும் என்றும் அவர் கூறினார்.
newstm.in