வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 18,866 விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும். குறிப்பாக, பொங்கலுக்கு முன்னதாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
2.67 கோடி மின் நுகர்வோர்களுக்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கோடியே 20 லட்சம் பேர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் மூலமாக மொத்தம் 58 லட்சமும், சிறப்பு முகாம் மற்றும் அலுவலகங்கள் என மொத்தம் 67 லட்சம் பேர் இணைத்துள்ளனர். தொடர்ந்து பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை விரைவாக முடித்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.