இந்தியாவில் முகக்கவசம் – பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் – மத்திய சுகாதாரத்துறை..!!

மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று மதியம் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 6 முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டுக்காக வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பயணிகள் இந்தியாவுக்கு வருவார்கள் என்பதால் விமான நிலையத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை வகுத்தல், கொரோனாவின் புதிய மாறுபாடு குறித்து நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

அதன்பின்னர் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:- “சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். கொரோனா தொற்று இன்னும் முடிவடையவில்லை. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தச் சூழலையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சீனாவை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் மாறுபாடு இந்தியாவிலும் நுழைந்தது. குஜராத்தில் 2 மற்றும் ஒடிசாவில் ஒரு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. சீனாவில் பரவிவரும் BF7 ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும், புதியவகை கொரோனாவின் தன்மைகள் குறித்து கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த ஆலோசனைக்கு பிறகு ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- விமானப் போக்குவரத்துக்கு தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும். எந்த மாற்றமும் இல்லை. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். 27-28 சதவிகிதம் மக்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளனர். மூத்த குடிமக்கள் உள்பட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். அதற்கான வழிமுறைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.