கடந்த ஜூலை 11-ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு நிர்வாகிகளும் அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்கப்பட்டார்.
தற்போதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தொடர்வதாகக் கூறி புதிய நிர்வாகிகளை அறிவித்து வரும் பன்னீர்செல்வம், சென்னை வேப்பேரியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஓ.பன்னீர்செல்வத்தால் அறிவிக்கப்பட்ட 88 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 100 தலைமை கழக நிர்வாகிகள் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுக தலைமையகம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர். உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்தி வருவது ஏன்?
கட்சியின் பொறுப்பு எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால், ஓபிஎஸ் இதுபோன்று செயல்படுவது குறித்து சட்ட விளக்கம் அளிக்க வேண்டும். இந்த நோட்டீஸிற்கு உடனடியாக பதிலளிக்காவிட்டால், உறுதியாக சட்ட நடவடிக்கை தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு தனது அதிகாரப்பூர்வு இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. இந்த நிலையில் ஓபிஎஸ்-க்கு நெருக்கடியை அதிகரிக்கும் நோக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் கட்சியின் சின்னம், கொடி பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.