
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், உங்களுக்குள் ஒரு போட்டியாளர் தேவை என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று இரவு நடைபெற்றது. விழாவில் படத்தின் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்டு நடிகர் விஜய் மேடையில் ரஞ்சிதமே பாடலை பாட, அவருடன் ரசிகர்களும் கூட சேர்ந்து பாடினார்கள். பின்னர் பேசிய விஜய், 1990 களில் எனக்கு ஒரு நடிகர் போட்டியாளரா வந்தார் என்றார்.
கொஞ்ச நாட்களில் அவர் எனக்கு சீரியசான போட்டியாளராக மாறி விட்டார். அவரோட வெற்றியால நானும் வேகமா ஓட வேண்டியிருந்தது. அவரை விட அதிகமா ஜெயிக்கணும்னு நினைச்சேன். எல்லாருக்கும் அப்படி ஒரு போட்டியாளர் தேவை என்றார்.
அந்த போட்டியாளர் பேரு ஜோசப் விஜய் என்று விஜய் கூறியதும் அரங்கமே அதிர்ந்தது. பின்னர் தொடர்ந்து பேசிய அவர், உங்க கூட நீங்க போட்டி போடுங்க என்றார். தேவையான விமர்சனமும் தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மல ஓட வைக்கும் என்றார்.

வாழ்க்கைல முன்னேறனும்னா உங்களுக்கு ஒரு போட்டியாளர் இருக்கணும். ஆனா, அந்த போட்டியாளர் நீங்களாதான் இருக்கணும் என்று நடிகர் விஜய் தெரிவித்தார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, ரசிகர்கள் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
newstm.in