சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் காய்ச்சல் பரிசோதனை செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டமாக பரிசோதனை செய்யும் பணி கடந்த 24-ம் தேதி முதல் விமான நிலையங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதிய வகை கொரோனாவா, இல்லையா என்பது பற்றி ஆய்வு செய்ய அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நேற்று, சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த விருதுநகரைச் சேர்ந்த தாய், மகள் ஆகிய 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இரண்டு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.