டெல்லியில் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது ராகுல்காந்தி பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறியதாக சிஆர்பிஎப் குற்றம்சாட்டியுள்ளது.
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாதுகாப்பு குளறுபடி நடந்ததாக கூறி காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சிவேணுகோபால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், கடந்த 24ஆம் தேதி ராகுல் நடைபயணம் டெல்லிக்குள் நுழைந்த போது பலமுறை பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுபடுத்தும் பணியில் டெல்லி காவல்துறை தோல்வி அடைந்தது என குற்றம் சாட்டினார்.
z+ பாதுகாப்பு உள்ள ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்களே அரண் அமைத்து பாதுகாப்பு வழங்கியதாகவும், ஹரியான மாநிலத்தில் பாரத் ஜோடா யாத்திரைக்கு பயன்படுத்தபட்டு வரும் கண்டெய்னர்களில் மாநில உளவு பிரிவு அத்துமீறி நுழைந்ததாகவும் கூறினார்.
வரும் நாட்களில் காஷ்மீரில் நடைபயணத்தை தொடங்க உள்ளதால் ராகுல் காந்திக்கு பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். மத்திய அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடாமல் காங்கிரஸ் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுகொண்டார்.
இந்நிலையில் இந்த கடிதத்திற்கு சிஆர்பிஎஃப் விளக்கம் அளித்துள்ளது. அதில், ராகுல் காந்திக்கு வழிகாட்டு நெறிமுறைகளின் படி உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது என சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது.
மேலும், யாத்திரையின் போது, ராகுல் காந்தி பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறினார் என குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை ராகுல் காந்தி 113 முறை பாதுகாப்பு விதிமுறைகளை மீறி இருக்கிறார் என சிஆர்பிஎஃப் குற்றம் சாட்டியுள்ளது.
newstm.in