
தீபிகா படுகோன்-ஷாருக்கான் நடித்த ‘பதான்’ படத்தில் மாற்றங்கள் செய்து சான்றிதழுக்கு சமர்பிக்குமாறு தணிக்கை துறை பரிந்துரைத்து உள்ளது.
டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி உள்ள பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாகிறது. இதில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடல் ஆபாசத்தின் உச்சம் என மிகப்பெரிய சர்ச்சைகள் கிளம்பின.

இந்த பாடல் 13.5 கோடி பார்வைகள் கடந்து யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.இதனிடையே பாஜகவினர் மற்றும் இந்து மத அமைப்பினர் இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஷாருக்கான் நடித்த பதான் படத்தில் சர்ச்சைக்குரிய பாடல் காட்சி காரணமாக தணிக்கை துறை படத்தில் மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது.

பாடல் காட்சிகள் உட்பட சில மாற்றங்களைச் செய்து மீண்டும் சான்றிதழுக்காகச் சமர்ப்பிக்குமாறு திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, பதான் படத்தின் தயாரிப்பாளர்களைக் கேட்டுக்கொண்டு உள்ளார். சிபிஎப்சி குழுவின் சான்றிதழுக்காக சென்றபோது குழுவின் வழிகாட்டுதல்களின்படி ஒரு முழுமையான ஆய்வு நடத்தப்பட்டு மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டன.
newstm.in