மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பொதுமக்கள் நலன் கருதி ஜனவரி 31-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்.
தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்காக நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு கோடியே 67 லட்சம் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இன்றுடன் (டிசம்பர் 31-ம் தேதி) அவகாசம் முடிவடைவதால், மேலும் ஒரு மாதம் கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதையடுத்து, பொதுமக்கள் சிலர் இன்னும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்காததால், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்.