மயக்க மருந்து கொடுத்து பெண் பலாத்காரம்; குற்றவாளி கைது
அம்பத்துார்: செங்குன்றம் அடுத்த சோழவரத்தைச் சேர்ந்தவர் டெய்சி, 42; தனியார் ஓட்டல் ஊழியர். இவருக்கு, அதே ஓட்டலில் பணியாற்றிய நபரின் வாயிலாக, மதுராந்தகத்தைச் சேர்ந்த சுரேஷ், 51, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
டெய்சி அவருக்கு, மகளிர் குழு வாயிலாக லோன் வாங்கி கொடுத்துள்ளார். அவர் பணத்தை சரியாக செலுத்தாததால், டெய்சி கண்டித்துள்ளார்.
இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் சுரேஷ், மொத்த பணத்தையும் கட்டுவதாக கூறி, சோழவரம் பெரியார் நகரில், தான் தங்கியுள்ள அறைக்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற டெய்சிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சுரேஷ் பாலியல் பலாத்காரம் செய்து, அதை அவரது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.
பின், அதை காட்டி மிரட்டி அடிக்கடி பணம் கேட்டும் மிரட்டியுள்ளார். இதற்கு டெய்சி மறுக்கவே, வீடியோவை டெய்சியின் மகனுக்கு அனுப்பி உள்ளார்.
இது குறித்து, கடந்த 5ம் தேதி, டெய்சி அம்பத்துார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரித்த போலீசார், ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த சுரேஷை, நேற்று காலை மொபைல் போன் டவர் வாயிலாக, நேற்று ரெட்டேரியில் சுற்றிவளைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
பெண்ணிடம் செயின் பறித்த நபருக்கு பொதுமக்கள் தர்மஅடி
திண்டிவனம்: குடிபோதையில் பெண்ணிடம் செயின் பறித்த நபரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
திண்டிவனம் அடுத்த தென்களவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசு மனைவி கன்னியம்மாள், 29; இவர், நேற்று வீட்டிற்கு பொருட்கள் வாங்க தனது உறவினர்களுடன் திண்டிவனம் வந்துள்ளார்.
மாலை 6:00 மணிக்கு, இந்திரா காந்தி பழைய பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தபோது, அவ்வழியாக வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர், கன்னியம்மாள் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்தார்.
உடன் அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து தர்மஅடி கொடுத்து திண்டிவனம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், திண்டிவனம் அடுத்த ஆசூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் முருகன், 32; என்பதும், மதுபோதையில், பெண்ணிடம் செயின் பறித்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரிடம் மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.
பில் கொடுக்காததால் வேதனை மற்றொரு ஒப்பந்ததாரர் தற்கொலை
துமகூரு: கர்நாடகாவில், பில் பாக்கி கொடுக்காததால் மற்றொரு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார்.
துமகூரில் உள்ள சப்தகிரி காலனியைச் சேர்ந்தவர் பிரசாத், 50. பொதுப்பணித் துறையின் சிவில் ஒப்பந்ததாரராக இருந்தார். இவர் செய்த பணிகளுக்கு, அரசிடம் இருந்து பில் பாக்கி வராததால், கடன் தொல்லையால் அவதிப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், துமகூரு அருகே உள்ள தேவராயனதுர்காவில் உள்ள விருந்தினர் மாளிகையில், மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, துமகூரு மாவட்ட ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் பலராம் கூறுகையில், ”தற்கொலை செய்த பிரசாத், கடன் தொல்லையால் அவதிப்பட்டார். அவருக்கு வர வேண்டிய பில் தொகை வரவில்லை. கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு நெருக்கடி அளித்தனர். இதனால் சமீபத்தில் தன்னுடைய வீட்டையும் விற்றார். அரசியல்வாதிகளின் ஊழலே இவரது சாவுக்கு காரணம்,” என்றார்.
ஏற்கனவே வளர்ச்சி பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக கூறி, பெலகாவியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் தற்கொலை செய்திருந்தார். தற்போது, மீண்டும் ஒரு ஒப்பந்தாரர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
கஞ்சா வியாபாரிகளின் 127 வங்கிக் கணக்கு முடக்கம்
சென்னை: தமிழகத்தில், ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை – 3.0’ சோதனையில், 127 வங்கிக் கணக்குகளும், 8.84 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, டி.ஜி.பி., சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 19 நாட்களில், 1,811 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1.85 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,610 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்திய 159 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 127 வங்கிக் கணக்குகளும், 8.84 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, தொடர் நடவடிக்கை காரணமாக, 282 காவல் நிலைய எல்லைகளில், போதைப் பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஆறு மாதங்களாக, தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும், போதைப் பொருள் விற்பனை வழக்குகள் பதிவாகவில்லை.
அதேபோல, அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும், போதைப் பொருள் இல்லாத பகுதியாக மாற்ற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்கள், கமிஷனர்களுக்கு, கஞ்சா மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக வாங்கி குவித்த சொத்துக்களையும் முடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதை கண்காணிக்க, அதிக காவலர்களை நியமித்து, நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தவறான சிகிச்சையால் மகள் சாவு தனியார் மருத்துவர் மீது தந்தை புகார்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் மகள் இறந்ததாக போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் எபிநேசர் மகள் கிரேசி, 19; சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., முதலாமாண்டு படித்து வந்தார்.
கடந்த 28ம் தேதி அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடன், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற கிரேசிக்கு 30ம் தேதி 2 கால்களும் செயலிழந்துள்ளது. உடன் மீண்டும் அதே மருத்துவமனையிலும், தொடர்ந்து கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்ககாக சேர்த்தனர். அங்கு அவர், கடந்த 30ம் தேதி இரவு இறந்தார்.
இந்நிலையில், முதலில் சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் மகள் இறந்து விட்டதாக அவரது தந்தை எபிநேசர் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
அடியாட்களைக் கொண்டு மிரட்டல் பெண் மீது விவசாயி போலீசில் புகார்
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே அடியாட்களை வைத்து மிரட்டுவதாக விவசாயி அளித்த புகாரின் பேரில், பெண் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 65; விவசாயி. இவருக்கு, செம்பியன்மாதேவி பகுதியில் வீட்டு மனை உள்ளது.
அதனை அப்பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் மனைவி கலையரசி குடும்பத்தினர் கைப்பற்றும் நோக்கில் செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சுப்ரமணியனை கலையரசி குடும்பத்தினர் அடியாட்கள், குண்டர்களை வைத்து மிரட்டியுள்ளனர்.
இது குறித்து சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் கலையரசி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்