முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த திரு.கே.வி.சீனிவாசன் அவர்கள் இன்று அதிகாலை 04.30 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்கான பணியிலிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
கே.வி. சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் உயிரிழந்த கே.வி. சீனிவாசன் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னையில் பிரபலமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் அதிகாலை விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்று, சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு நிகழ்வை சிறப்பான வகையில் புகைப்படம் எடுக்கும் பணியில், தி இந்து நாளிதழின் மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் உடல்நிலை பாதிக்கப்பட்டு பணியின் போதே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது. புகைப்படம் எடுக்க சென்று உயிரிழந்த மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் மறைவுக்கு செய்தித்துறையினரும், அரசியல்கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.