மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங். எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி..!!

ஈரோடு: மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனான திருமகன் ஈவெரா நேற்று மாரடைப்பால் காலமானார். ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு இன்று காலையில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் முத்துசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை, காங்கிரஸ் எம்.பி.க்கள் கார்த்திக் சிதம்பரம், திருநாவுக்கரசர், ஜோதிமணி உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதை தொடர்ந்து திருமகன் ஈவெரா உடல் ஈரோடு காவேரி கரையில் உள்ள ஆத்மா மின் மயானம் வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் வரை நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் முத்துசாமி, கே.எஸ்.அழகிரி, கே.ஜி.வாசன், தங்கபாலு, ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின் காவேரி கரையில் உள்ள ஆத்மா மின் மயானத்தில் நடந்த இறுதி சடங்கிற்கு பிறகு திருமகன் ஈவெராவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மகள், தந்தையின் சிதைக்கு தீ வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.