சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன் தொடர்ந்து 6வது நாளாக இன்று போராட்டம் நடத்திய ஒப்பந்த செவிலியர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2,300 தற்காலிக செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் பணிக்காலம் நிறைவடைந்தது. இனிமேல் பணிநீடிப்பு இல்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திலும் பணியில் அமர்த்தப்படுவார்கள். பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று அரசு உறுதியளித்தது.
ஆனால், ஒப்பந்த செவிலியர்கள் தரப்பில் இனி தற்காலிக நர்சுகளாக வேலையில் சேர மாட்டோம். அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன் தொடர்ந்து 6வது நாளாக இன்று போராட்டம் நடத்திய ஒப்பந்த செவிலியர்களை போலீசார் கைது செய்தனர்.