விமானத்தில் பயணி ஒருவர் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வேதச விமானங்களில் மது விநியோகிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என 48 சதவீத பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சகபயணி மீது மது போதையில் இருந்த சக பயணி சிறுநீர் கழித்த விவகாரம், தலைப்புச் செய்தியாக மாறியதை அடுத்து, இத்தகைய கோரிக்கை வலுத்துள்ளது. லோக்கர் சர்கிள்ஸ் என்ற சமூக வலைதள நிறுவனம் ஒரு ஆய்வை மேற்கொண்டது.
அதில், பயணிகள் யாரும் போதையில் விமானத்தின் ஏறக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என 50 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். விமானத்தில் மது அருந்தக்கூடாது என்ற 32 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
பயணிகள் மருந்து அருந்தியுள்ளனரா என்று சோதித்து, அவர்களின் பயணத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை விமான ஊழியர்களுக்கு, விமான நிறுவனங்கள் வழங்க வேண்டும் என 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பரிலும், டிசம்பரிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதனால், போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்த முனைப்பு விமான நிறுவனங்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற செயல் மற்ற பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்பதால், நாடு முழுவதும் விமான நிறுவனங்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. அதனால் விமான பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகிறது.
மேலும், இந்த விவகாரம் சர்வதேச விமானங்களில் அவசியம் மது விநியோகிக்க வேண்டுமா என்ற விவாதத்தையும் எழுப்பியுள்ளது. எனவேதான், போதையில் உள்ள பயணி விமானத்தில் ஏறுவதையும், பயணிப்பதையும் தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.
இந்த விவகாரத்தை டாடா குழுமம் உரிய முறையில் கையாளவில்லை என்றும், 70 வயது பெண்மணி அளித்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். ஆய்வில், சர்வதேச விமானங்களில் மது விநியோகிக்கலாமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
அதற்கு, 48 சதவீதம் பேர் மது விநியோகிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதுபோன்ற செயல்களுக்கு எதிரான பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் என 89 சதவீத பயணிகள் கூறியுள்ள நிலையில், மத்திய அரசு தலையிட வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் ஒருபுறம் இருக்க, இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை பயணிகள் முன்வைப்பது இது முதல் முறை அல்ல. இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால்தான், அநாகரீக செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
newstm.in