
பெண்களுக்கு கல்வியறிவு கிடைக்கச் செய்ய வேண்டும். அல்லது, கர்ப்பம் அடைவதை எப்படி தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களிடம் ஏற்பட வேண்டும் என, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வைஷாலி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர், “மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியவில்லை. பெண்களுக்கு கல்வியறிவு கிடைக்கும் போதுதான் மாநிலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால் மக்கள் பெருக்கம் நீடிக்கும்.

எனவே, பெண்களுக்கு கல்வியறிவு கிடைக்கச் செய்ய வேண்டும். அல்லது, கர்ப்பம் அடைவதை எப்படி தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களிடம் ஏற்பட வேண்டும். தங்களது செயலினால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆண்கள் அக்கறை காட்டுவதில்லை. இதனால், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை” என்றார்.
முதல்வர் நிதிஷ் குமாரின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.