காரில் சென்று ஆடுகள் திருட்டு.. விற்ற பணத்தில் உல்லாசம்.. 3 பேரை அள்ளியது போலீஸ்..!

பல்லாவரம் அருகே, காரில் சென்று ஆடுகள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருடிய ஆட்டை இறைச்சி கடையில் விற்று உல்லாசமாக செலவு செய்தது விசாரணையில் தெரியவந்தது.

சென்னை, பல்லாவரம் அடுத்த பம்மல் நாகல்கேணி ஆதம் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சின்ன பொன்னன் (80). இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த மாதம் இவரது வீட்டின் எதிரே மேய்ந்து கொண்டிருந்த 5 ஆடுகளை காரில் வந்த மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட அந்த கார், அனகாபுத்தூரில் உள்ள மெக்கானிக் கடையில் நின்றிருந்தது. அந்த காரின் உரிமையாளர் யார் என போலீசார் விசாரித்த போது, அனகாபுத்தூர் கருணாநிதி நகர் 1-வது தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் (30) என தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஆட்டோ டிரைவரான ஜெயக்குமாருக்கு, ஆட்டோ ஓட்டும்போது பொழிச்சலூரைச் சேர்ந்த சரோஜினி (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் சேர்ந்து பகல் நேரங்களில் காரில் சென்று ஆடுகளை திருடினர். காரை ஜெயக்குமார் ஓட்ட, முன்பகுதியில் சரோஜினி அமர்ந்து கொண்டு பம்மல், நாகல்கேனி, அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மேய்ச்சலுக்கு விடப்பட்டு இருக்கும் ஆடுகளை திருடிச்சென்று, விருகம்பாக்கம் இந்திரா நகர் 3-வது தெருவைச் சேர்ந்த பரூக் (30) என்பவரது இறைச்சிக் கடையில் விற்றும், அதில் கிடைத்த பணத்தை கொண்டு உல்லாசமாக செலவு செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஜெயக்குமார், சரோஜினி மற்றும் பரூக் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆடு திருட பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இவ்வாறு கடந்த 6 மாதங்களாக இவர்கள் காரில் சென்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியதும், இவ்வாறு திருட்டு நடக்கும்போது ஆட்டை பறி கொடுத்தவர்கள் சங்கர்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததும் இவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.