
துருக்கியின் காஜியான்தெப் நகருக்கு அருகில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில், 7.8 ரிக்டர் அளவில் பயங்கர சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துருக்கியின் காஜியான்தெப், ஹடாய், கஹ்ராமன்மராஸ், தியர்பாகிர் உள்ளிட்ட 10 மாகாணங்களிலும், அண்டை நாடான சிரியாவின் எல்லையில் அமைந்துள்ள அலெப்போ மற்றும் ஹமா நகரங்கள் என சுமார் 330 கிமீ சுற்றளவுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், துருக்கியில் மட்டும் 6,000க்கும் மேற்பட்ட குடியிருப்புக் கட்டிடங்கள் இடிந்துவிழுந்தன. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எதிர்பாராமல் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல அடுக்குமாடிக் கட்டிடங்கள் மண்ணில் புதைந்தது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 40 மணி நேரத்திற்குள் துருக்கி மட்டும் சிரியாவில் சுமார் 500 க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், கட்டிடக் குவியல்களில் இருந்து கொத்துக் கொத்தாக சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இரவு, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் துருக்கியில் மட்டும் 24,400 பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவை தவிர இந்தியா, சீனா உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.