ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில், இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் உள்ளது என்று தாஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் பணவீக்கம் எழுச்சியடைந்திருப்பதால் பல விஷயங்களையும் கவனமாக ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளர்.
கடந்த பல ஆண்டுகளாக வெளிவரும் உலகளாவிய பொருளாதார நிலைகள்,’ உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அவசரத் தேவையை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர், இன்று (2023 பிப்ரவரி 8, புதன்கிழமை) ஆறு பேர் கொண்ட விகித நிர்ணயக் குழுவின் முடிவை அறிவித்தார். ரெப்போ விகிதத்தின் உயர்வானது, வட்டி விகிதத்தை பாதிக்கும் என்பதோடு, கடனுக்காக மாதாந்திர தவணை செலுத்துபவர்களின் EMI தொகையையும் அதிகரிக்கும்.
சில்லறை பணவீக்கம் மிதமான அறிகுறிகளைக் காட்டும் நிலையில், ரிசர்வ் வங்கியின் 6% மேல் சகிப்புத்தன்மை நிலைக்குக் கீழே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்கும் 2023-24 நிதியாண்டில், GDP வளர்ச்சி மந்தநிலையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி 25 அடிப்படை புள்ளிகள் உயர்வை மட்டுமே தேர்வு செய்துள்ளது.
இதற்கிடையில், இன்று காலையிலேயே பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியது, ரிசர்வ் வங்கி, சிறிய அளவில் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
எனவே, இந்த புதிய வட்டி விகித அறிவிப்பு, பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடையே பெரிய அளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். இன்று காலை 09.30 மணி நிலவரப்படி நிஃப்டி 50 குறியீடு 0.2% அதிகரித்து 17,757.10 ஆகவும், S&P BSE சென்செக்ஸ் 0.15% உயர்ந்து 60,376.17 ஆகவும் இருந்தது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணயக் கொள்கைக் குழு (Monetary Policy Committee), அதன் மூன்று நாள் கூட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியது, 25 அடிப்படை புள்ளிகள் விகிதம் அதிகரிப்பு இருக்கும் என்பது பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதையே நாணயக் கொள்கைக் குழுவும் செய்திருக்கிறது.
டிசம்பர் மாத நிதிக் கொள்கை மதிப்பாய்வில், மத்திய வங்கி 50 bps அதிகரித்தது. கடந்த ஆண்டு மே மாதம் முதல், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த குறுகிய கால கடன் விகிதத்தை 225 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது, இவை, பெரும்பாலும் வெளிப்புற காரணிகளால் இயக்கப்படுகிறது, குறிப்பாக ரஷ்யா-உக்ரைன் போர் வெடித்ததைத் தொடர்ந்து உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவு உட்பட பல காரணிகள் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.