
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. தலைவர்கள் பலரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
இதனிடையே, தி.மு.க.வினரின் பிரசாரத்தின் போது ஒரு குடுகுடுப்பைக்காரரும் பிரசாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த குடுகுடுப்பைக்காரரும், தன் கையில் இருக்கும் குடுகுடுப்பையை ஆட்டியபடி, இந்த தொகுதியில் கை சின்னத்தில் இளங்கோவனுக்கு வாக்களிக்குமாறு ஜக்கம்மா சொல்கிறார் என்றும், இல்லந்தோறும் கல்வி கொடுத்திருக்கிறது இந்த அரசு, இந்த தேர்தலில் இளங்கோவன்தான் ஜெயிப்பார் என்று ஜக்கம்மா சொல்கிறார் என்று கூறியபடி பிரச்சாரம் செய்தார்.
இந்த வீடியோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாக விமரிசித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.வின் தேர்தல் பிரச்சாரகர் ஜக்கம்மா.. என்ன ஒரு விந்தை. பெரியாரின் பேரன், ஜக்கம்மா மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் மிகவும் சுவாரஸ்யமான நேரம் என்று அந்த பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.