முகலாய பேரரசர் ஜஹாங்கீரின் மூன்றாவது மகனாக பிறந்தவர் ஷாஜகான். மேவாரின் இராசபுத்திரர்கள் மற்றும் தக்காணத்தின் லோடிக்களுக்கு எதிரான இராணுவப் படையெடுப்புகளில் ஷாஜகான் பங்கெடுத்தார். 1627-ம் ஆண்டு அக்டோபரில் ஜஹாங்கீரின் மரணத்திற்குப் பிறகு தனது தம்பி சகாரியார் மிர்சாவைத் தோற்கடித்த பிறகு, ஷாஜகான் ஆக்ரா கோட்டையில் பேரரசராகத் தனக்கு மகுடம் சூட்டிக்கொண்டார்.
இவர் செங்கோட்டை, ஷாஜகான் மசூதி மற்றும் தாஜ்மகால் ஆகிய பல்வேறு நினைவுச்சின்னங்களைக் கட்டினார். தாஜ் மகாலில் இவரது விருப்பத்துக்குரிய மனைவியான மும்தாசு மகால் அடக்கம் செய்யப்பட்டார். ஜனவரி 22, 1666 அன்று, அவர் தனது 74 வயதில் இறந்தார். அவர் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் அடக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஷாஜகானின் 368வது நினைவு நாளையொட்டி, பிப்ரவரி 17 முதல் 19 வரை தாஜ்மஹாலுக்குள் செல்ல அனைவருக்கும் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 நாட்களும் ஷாஜகானின் மற்றும் மும்தாஜ் ஆகியோரின் கல்லறைகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வரலாற்றுச் சின்னம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.