குளிக்க சென்ற போது கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகள் குடியரசு தினத்தினை முன்னிட்டு திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்றனர்.
விளையாட்டு போட்டி நிறைவடைந்ததும் மாயனூர் கதவணை பகுதிக்கு சுற்றி பார்க்க வந்தனர். அங்கிருந்த கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு மாணவிகள் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர்.
அப்போது ஒரு மாணவி ஆற்றில் இழுத்து செல்லப்பட்டார். மற்ற மாணவிகள் 3 பேர் அவரை காப்பாற்ற முயன்ற போது அவர்களும் நீரில் மூழ்கினர். இதனையடுத்து மாணவிகளும், ஆசிரியர்களும் செய்வதறியாது தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் படகு மூலம் நான்கு பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு நான்கு பேரின் உடல்களும் ஒன்றன்பின் ஒன்றாக கண்டெடுக்கப்பட்டது.
இறந்தவர்கள் மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா என்பது தெரியவந்தது. நான்கு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், எஸ்.பி. சுந்தரவதனம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் பார்வையிட்டனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in