கர்நாடகா மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதை எதிர்கொள்ளும் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தயாராகி வருகின்றன. பாஜக தரப்பில் இந்தத் தேர்தலுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பொறுப்பாளராகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த முறை போல அல்லாமல், இந்தமுறை தனிபலத்துடன் ஆட்சி கட்டிலில் அமர பாஜக திட்டமிட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று, ஆட்சியை பிடிக்க வியூகம் அமைத்து வருகின்றனர். இதற்காக 20 நாள்களுக்கு விஜய் சங்கல்ப் யாத்ரா எனும் மெகா யாத்திரை நடத்த உள்ளனர்.
இந்த யாத்திரை வருகிற மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக மொத்தம் 4 மெகா யாத்திரைகளை பாஜக நடத்த உள்ளது. காங்கிரஸ் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படும் நிலையில், அதனை முறியடிப்பதற்காக இந்தத் திட்டத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. இந்த நான்கு யாத்திரைகளும், கர்நாடகாவின் 4 விதமான இடங்களில் தொடங்கி கடைசியில் ஒரே இடத்தில் நிறைவுபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலில் தொடங்க உள்ள யாத்திரையில் ஜெ.பி.நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங் போன்ற மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.