இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியானது இன்று அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸை விளையாடியது.
இதனையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு இந்த முறை ஓரளவிற்கு சிறப்பான பேட்டிங் அமைந்தது என்றே கூறலாம். ஏனென்றால் முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஓப்பனிங் வீரர் உஸ்மான் கவாஜா 125 பந்துகளில் 81 ரன்களை அடித்து நல்ல அடிதளத்தை அமைத்துக்கொடுத்தார். இதன் பின்னர் வந்த மிடில் ஆர்டர் வீரர்கள் வழக்கம் போல சொதப்பிய போதும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களும், கேப்டன் பேட் கம்மின்ஸ் 33 ரன்களையும் சேர்க்க ஆஸ்திரேலிய அணி கௌரவ ஸ்கோரை எட்டியது.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸின் போது டேவிட் வார்னருக்கு நடந்த சம்பவத்தால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். ஓப்பனிங் ஆடிய வார்னர் பேட்டிங் செய்வதற்கே மிகவும் தடுமாறினார். இதனால் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்துகள் வார்னரின் உடலை பதம் பார்த்தது. தொடர்ச்சியாக முதுகுப்பகுதி மற்றும் ஹெல்மெட்களில் அடிவாங்கிக்கொண்டே இருந்தார்.
இறுதியில் அதிவேகமாக சென்ற பந்து தலையில் பெரும் அடியை கொடுத்தது. இதனால் சிறிது நேரம் தலைசுற்றி நின்றார். அந்த சமயத்தில் அவருக்கு எந்தவொரு மருத்துவ பரிசோதனையும் செய்யப்படாத சூழலில், இந்திய இன்னிங்ஸின் போது அவர் ஃபீல்டிங்கிற்கே வெளிவரவில்லை. இந்நிலையில் அவர் இந்த போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள கவாஜா, வார்னரை இன்று மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள். அவரின் நிலைமை தற்போது பயப்படும் வகையில் தான் உள்ளது. தலையில் அடிபட்டதால் ஃபீல்டிங்கிற்கு வரமாட்டார் எனக் கூறினார். எனவே வார்னருக்கு மாற்று வீரராக மேட் ரென்ஷா 2வது இன்னிங்ஸில் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 2 & 0 ரன்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.