ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் மயில்சாமி.நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக செயற்பாட்டாளர் என பல பன்முகங்களை கொண்டவர்.
தீவிர சிவ பக்தரான 57 வயதான நடிகர் மயில்சாமி சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார். சிவராத்திரி பூஜையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் அதிகாலை அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில்,படம் ஒன்றிற்காக அவர் நேற்று பேசிய டப்பிங் காட்சி ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கிளாஸ்மேட்ஸ் என்ற படத்திற்கு டப்பிங் பேசும் மயில்சாமி, ””மாப்புள்ள நா சொல்றத கேளு மாப்புள்ள ” என உரையாடும் காட்சிக்கு டப்பிங் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் மல்க தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.