அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, அ.தி.மு.க.வில் இல்லாத இரண்டு பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே இ.பி.எஸ் தரப்பு தான் எனக் கூறிய ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித்குமார், திடீரென குழப்பம் ஏற்படுத்தும் வகையில் இரண்டு பதவிகளையும் நீக்க வேண்டும் என்று சொல்வதும் இபிஎஸ் தரப்புதான் எனக் குற்றம்சாட்டினார்.
தேர்தல் நடத்தப்பட்டு தான் இரு பதவிகளும் நிரப்பப்பட வேண்டும் என்பது அதிமுகவின் விதிமுறை என்றும் அவர் கூறினார். பொதுக்குழு கூட்டுவது தொடர்பான நோட்டீசை முன்கூட்டியே வழங்கவில்லை. வழங்கப்பட்ட நோட்டீஸிலும் இடம்பெறாத விஷயங்களை பொதுகுழுவில் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
இதற்கு முன்பு கூட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுக்குழு நோட்டீஸ்கள் எல்லாம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.
அப்போது நீதிபதிகள் ஓபிஎஸ் தரப்புக்கு சில கேள்விகளை எழுப்பினர். அப்போது வாதங்கள் பரபரப்பாக இருந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
newstm.in