
ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் பரப்புரை செய்ய முதலில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், முதலமைச்சர் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று ஒரு நாள் மட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து கார் மூலம் ஈரோடு செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வீதிவீதியாக சென்று வாக்கு கேட்கிறார். இதற்காக இன்று காலை 9 மணி அளவில் விருந்தினர் மாளிகையில் இருந்து பிரச்சார வேனில் புறப்படும் அவர், பெரிய வலசு, பாரதி தியேட்டர், சக்தி ரோடு பஸ்நிலையம், மெட்ராஸ் ஓட்டல், மஜீத் வீதி வழியாக சென்று சம்பத் நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அதன் பிறகு கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக சென்று காந்தி சிலை அருகே பிரச்சார வேனை நிறுத்தி அங்கு திரண்டிருக்கும் மக்களிடையே பேசுகிறார். இதன் பிறகு பூம்புகார் நகர், காந்திநகர், வல்லரசம்பட்டி வழியாக அக்ரஹாரம் சென்று பிரச்சாரம் செய்கிறார்.
அத்துடன் காலை நேர பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மதிய சாப்பாட்டுக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மாலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். மாலை 3 மணி அளவில் சம்பத் நகர், அம்மு மெஸ் பிரிவு, சின்னமுத்து வீதி வழியாக சென்று முனிசிபல் காலனி அருகே வேனில் இருந்தபடி பேசுகிறார். அதன்பிறகு மேட்டூர் ரோடு, பன்னீர் செல்வம் பூங்கா வழியாக சென்று பெரியார் நகரில் பிரச்சாரம் செய்து கை சின்னத்துக்கு வாக்கு கோருகிறார். அத்துடன் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கிருந்து பின்னர் சென்னை புறப்படுகிறார்.