
தமிழகம் முழுவதும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் கீழ் செயல்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), தனியார் செயற்கைக்கோள் சேனல்கள், கட்டண சேனல்கள் தங்களது கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.இதனால், மார்ச் மாதம் முதல், கேபிள் டிவி மாதக் கட்டணம் சுமார், 300 ரூபாயிலிருந்து, 500 ரூபாயாக உயர வாய்ப்பு இருக்கிறது.
இதனைக் கண்டித்தும் கட்டண உயர்வை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி, திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், நெல்லை, சேலம், காஞ்சிபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்ச் மாதத்திற்குள் கட்டணத்தை குறைக்காவிட்டால், ஒருநாள் முழுவதும் அனைத்து கட்டண சேனல்கள் ஒளிபரப்பை நிறுத்தி, அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும்’ என்று சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்ததனர்.