
அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த மாதம் 26ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில், சாதனையாளர்களுக்கு டாக்டர் பட்டம் மற்றும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற பெயரில் விருது வழங்கப்பட்டது. பொழுதுபோக்கு பிரிவில், நடிகர் வடிவேலுவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் தேவா டாக்டர் பட்டம் பெற்றார்.

அதே போல் பரிதாபங்கள் கோபி, சுதாகருக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. அதாவது, நிகழ்ச்சி நடத்திய தனியார் நிறுவனத்திற்கும், பல்கலைக்கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் விளக்கமளித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு கடந்த நவம்பர் மாதமே அனுமதி கோரியதாகவும், முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கடிதம் தந்ததாக கூறி பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி கோரப்பட்டதாகவும், ஆனால், வள்ளிநாயகத்தை அவர்கள் ஏமாற்றியிருப்பதாகவும் துணைவேந்தர் கூறினார்.

இதனையடுத்து அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், கையெழுத்து முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன.
அதன்படி நிகழ்ச்சி நடத்திய அமைப்பின் இயக்குனரான ராஜு ஹரிஷ் என்பவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் தலைமறைவானதால், காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் முன்ஜாமின் கோரி ராஜு ஹரிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹரிஷ் மற்றும் அவரது நண்பர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in