மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களைச் சார்ந்த தொழிற் சங்கங்கள், சிறு மற்றும் குறுந்தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
மக்கள் அரசை தேடிப்போன காலம் மாறி, மக்களை தேடி அரசு வந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு மக்களுடைய பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில்தான், கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை உருவாக்கி அந்தப் பணியை இன்றைக்கு மேற்கொண்டிருக்கிறோம்.
ஏற்கனவே தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு சில மாதங்களுக்கு முன் அதற்கான தனி ஆலோசனைக் கூட்டத்தைக்கூட மதுரையில் நடத்தினோம். அதன் தொடர்ச்சியாக பல மேல் நடவடிக்கைகளெல்லாம் எடுக்கப்பட்டிருக்கிறது,அதேபோல, இந்தப்பகுதி விவசாயிகள் சார்பாக தெரிவித்த கருத்துகள் மீது உரிய நடவடிக்கையை நிச்சயமாக எடுப்போம். அதேபோல விவசாயிகளுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் ஒரு தனி கொள்கையை வகுத்திருக்கிறோம்.
தேர்தல் நேரத்திலேயே அளித்த வாக்குறுதிப்படி விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தொடர்ந்து தாக்கல் செய்து வருகிறோம். இப்போதும், வருகிற 20-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு, அடுத்ததாக வேளாண்மைத் துறை பட்ஜெட்டைத் தான் தாக்கல் செய்யப் போகிறோம். எனவே, உங்களது கோரிக்கைகளை நிச்சயமாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போல, தேனி மாவட்ட தோட்டக்கலை பயிர் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம். அடுத்தபடியாக, இராமநாதபுரம் மாவட்ட பகுதியைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை அரசு பரிவோடு பரிசீலிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிச்சயமாக, உறுதியாக சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் நாங்கள் கலந்து பேசி, உங்கள் மாவட்ட நிர்வாகம் மூலமாக படிப்படியாக அவற்றை நிறைவேற்றித் தருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
அறிவித்த எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லவில்லை. இன்னும் சில திட்டங்கள் மீதம் இருக்கிறது. அதையும் நிறைவேற்றக்கூடிய சூழ்நிலையில் தான் எங்களுடைய பணி அமைந்திருக்கிறது. உங்கள் கோரிக்கைகள் நிச்சயமாக, படிப்படியாக, உறுதியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.