உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா, மக்கள் தொகையை கட்டுப்படுத்த சுமார் 20 வருடங்களுக்கு முன்பே கடுமையான நடவடிக்கை எடுக்க தொடங்கியது. இதன் காரணமாக சீனாவில் பிறப்பு விகிதம் கவலையளிக்கும் விதமாகக் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்போது சீனாவில் இளைஞர்களைவிட முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த சீன அரசு மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிக்குச் சிறப்பு மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை 2021-ம் ஆண்டு முதல் அறிவித்துவருகிறது.
ஆனால், கொரோனா கால ஊரடங்கின்போது கூட சீனாவில் பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. அதற்கு குழந்தை பராமரிப்பு, கல்வி செலவுகள், குறைந்த வருமானம், பலவீனமான சமூகப் பாதுகாப்பு, பாலின ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை முக்கிய காரணிகளாக இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், சீனாவின் மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு அண்மையில் நடைபெற்றது.
அதில், பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக இரண்டாவது மற்றும் மூன்றாவது குழந்தைகளை வளர்க்கும் குடும்பங்களைக் காட்டிலும், முதலாவது குழநதையை வளர்க்கும் குடும்பத்துக்கு மானியங்களை அதிகரித்தல், இலவச பொதுக் கல்வியை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், கருவுறுதல் சிகிச்சைகளுக்கான அணுகல்களை இலகுவாக்குதல் உள்ளிட்ட முன்மொழிவுகள் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், சீனாவில் ஒன்பது கல்லூரிகள், இந்த மாதம் மாணவர்களுக்குக் காதலிக்க ஒரு வாரம் விடுமுறை அறிவித்திருக்கின்றன.
இது குறித்து Fan Mei கல்விக் குழுவின்கீழ் இயங்கும், 9 கல்லூரிகளில் ஒன்றான Mianyang Flying Vocational College, “மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் 7-ம் தேதி வரை வசந்தகால விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கையை நேசிக்கவும், அன்பு சார்ந்த எண்ணங்களை வளர்க்கவும் மாணவர்களை ஊக்குவிக்கிறோம். இந்த வசந்தகால இடைவெளி, நாட்டின் மக்கள்தொகை பிரச்னையைத் தீர்ப்பதற்கும் உதவும் என நம்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.