கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி ..!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களை ரயில்வே அமைச்சகம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் என்ஜினானது தனியாக இல்லாமல் ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.

ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. இவை சென்னையில் உள்ள பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகை தந்தார். கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி, சட்டையுடன் பிரதமர் மோடி வந்தார். கொச்சி கடற்படை தளத்தில் இருந்து நடைபயணமாக செல்லும் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இன்று இரண்டாவது நாளாக பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். குறிப்பாக நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபக்கமும் நின்ற பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியும் அவர்களை பார்த்து கைகளை காட்டினார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம் – காசர்கோடு இடையே இந்த வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் கேரள கவர்னர் மற்றும் முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.