ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்குச் சம்பந்தி ஆகிறார் தம்பி ராமையா; உமாபதி – ஐஸ்வர்யா காதல் மலர்ந்த கதை!

ஆக்‌ஷன் கிங் ஹீரோ அர்ஜுனுக்குச் சம்பந்தி ஆகிறார் தம்பி ராமையா – இயக்குநரும் குணச்சித்திர நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதியை, கரம் பிடிக்கிறார் நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா என்ற ஒரு செய்தி நேற்றிலிருந்து கோடம்பாக்கத்தில் ஹைடெசிபலில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மகனுடன் தம்பிராமையா

தம்பி ராமையாவின் மகன் உமாபதி, சில படங்களில் நாயகனாக நடித்திருப்பவர். விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ராஜா கிளி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். விஷாலின் ஜோடியாக ‘பட்டத்து யானை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா அர்ஜுன். நடிகர் அர்ஜுனின் மகள் இவர். உமாபதி, ஐஸ்வர்யா இருவரும் பல மாதங்களாகக் காதலித்து வருவதாகவும், இருவீட்டார் சம்மதத்துடன் விரைவில், இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

ஐஸ்வர்யா அர்ஜுன்

சென்ற ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’ என்ற ரியாலிட்டி ஷோவில் உமாபதி பங்கேற்றிருந்தார். அந்த ஷோவை நடிகர் அர்ஜுன் ஹோஸ்ட் செய்திருந்தார். அந்த ஷோவின் மூலமாகத்தான் உமாபதிக்கும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் இடையே காதல் மலர்ந்ததாகச் சொல்கிறார்கள். அந்த ஷோவிலிருந்தே அர்ஜுனின் குட்புக்கிலும் உமாபதி உள்ளார்.

இந்நிலையில் தம்பி ராமையாவிடம் இதுகுறித்து பேசினேன். “நீங்க கேள்விப்பட்ட தகவல் உண்மையானதுதான். ‘சர்வைவர்’ ஷோவில்தான் அவர்கள் இருவருக்குமிடையே காதல் மலர்ந்திருக்கிறது என உமாபதி சொன்னார். ஆனால், எனக்கே இந்தத் தகவல் கடந்த 20 நாள்களுக்கு முன்னர்தான் தெரியவந்தது. உடனே இதுகுறித்து அர்ஜுன் சாரிடம் பேசினோம்.

குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா

நான் இப்போது வெளியூரில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் இருக்கிறேன். விரைவில் சென்னை திரும்பிவிடுவேன். அதைப் போல அர்ஜுன் சார் தெலுங்கில் அவரது மகள் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிவடைந்ததும், இருவீட்டாரும் நிச்சயதார்த்தம் குறித்துப் பேச உள்ளோம்” என்கிறார் தம்பி ராமையா.

வாழ்த்துகள் ஐஸ்வர்யா மற்றும் உமாபதிக்கு!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.